செவ்வாய், 8 டிசம்பர், 2015

இது இரக்கத்தின் ஆண்டு (Jubilee Year Of Mercy - 2)


சனவரி முதல் டிசம்பர் வரை ஆங்கில நாட்காட்டி ஆண்டு என்று ஒன்று இருப்பது போலவே, தமிழகத்தில் ஜீன் முதல் மே மாதம் வரை கல்வி ஆண்டு என்று ஒன்று இருப்பது போலவே, கத்தோலிக்கத் திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழாவிற்கான முன் தயாரிப்பின் காலமான திருவருகைக் காலம் தொடங்கி, கிறிஸ்மஸ் காலம், தவக்காலம், பாஸ்கா காலம், பொதுக்காலம் போன்றவற்றை உள்ளடக்கிய வழிபாட்டு ஆண்டு  என்ற ஒன்று இருக்கின்றது. இந்த வழிபாட்டு ஆண்டானது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, நவம்பர் இறுதி வாரத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடைகிறது. ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டையும் குருக்கள் ஆண்டு, துறவிகள் ஆண்டு, பவுலின் ஆண்டு, குடும்ப ஆண்டு என்று ஏதேனும் ஒரு கருத்திற்காக அர்ப்பணிப்பது திருச்சபையின் வழக்கம். அது போல இருபத்தைந்து ஆண்டுகளுக்கொருமுறை யூபிலி ஆண்டாக திருச்சபை கொண்டாடுகின்றது. மேலும் காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப, தூய ஆவியின் தூண்டுதலால் சில சிறப்பு யூபிலி ஆண்டுகளும் அறிவிக்கப்படுகின்றன. அத்தகைய ஒன்றுதான் இந்த 'இரக்கத்தின் யூபிலி ஆண்டு'. (விரிவானத் தகவல்களை முதல் கட்டுரையில் ஏற்கனவே பார்த்தோம்.)

யூபிலி ஆண்டும் விவசாயமும்

யூபிலி ('யோவேல்') என்ற எபிரேயச் சொல் ஆட்டின் கொம்பை ஊதி, அருள்தரும் ஆண்டினை முழக்கம் இடுவதைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் லேவியர் புத்தகம் 25 ஆம் அதிகாரம் யூபிலி ஆண்டினைப் பற்றி மிக அருமையாக விளக்குகிறது. வாரத்தின் ஏழாம் நாள் நிலத்திற்கும், பணியாளருக்கும், கால்நடைகளுக்கும் ஓய்வு அளிக்க வேண்டும். இது போல ஏழாம் ஆண்டு ஓய்வு ஆண்டு. அந்த ஆண்டு முழுவதும் நிலத்தில் பயிரிடாமலும், தானாக முளைத்ததை அறுவடை செய்யாமலும் நிலத்திற்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஏழு ஓய்வு ஆண்டுகள் முடிந்து ஐம்பதாம் ஆண்டினை யூபிலி ஆண்டு என வகுத்து அந்த ஆண்டு முழுவதும் அருளின் ஆண்டாகக் கொண்டாடினர். யூபிலி ஆண்டு நிலத்துக்கு மட்டுமின்றி, உழைப்பவர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஓய்வு அளித்தது. அடிமைகளாக அல்லலுற்றவர்களுக்கு முழு விடுதலை அளித்தது. கடன்பட்டோரின் கடன்கள் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டது. சொந்த நிலத்தை பல ஆண்டுகளாக மீட்க முடியாதோருக்கு, அவர்களது நிலமானது யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்பட்டது. இவ்வாறு சமுதாயத்தைப் புதுப்பிக்கும் ஆண்டாக இருந்தது தூய யூபிலி ஆண்டு. இன்றைய யூபிலி விழாக்கள் இத்தகைய விடுதலைக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதே அர்த்தம் மிகுந்ததாகும்.

பண்டையக் கலாச்சாரங்களின் ஊற்றுக்களிலிருந்து நாம் பருகக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை இந்த விவிலியப் பகுதிகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. தமிழ், எபிரேயம் போன்ற பண்டைய வேளாண் மரபுகளில் சுற்றுச் சூழலை எள்ளளவும் பாதிக்கமால் இயற்கையோடு இயைந்து வாழ்வது பற்றிய உயரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. உலகிலேயே தலைச்சிறந்தது நமது தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமுமே என்பதை திருக்குறளைப் படிக்கும் போது தோன்றுகிறது. அதற்கு எந்த வகையிலும் குறைவுபடாத ஒரு பண்டையக் கலாச்சாரமாக இந்த யூபிலி ஆண்டைப் பற்றி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே யோசித்த எபிரேயக் கலாச்சாரத்தைக் கருதுகிறேன். விவிலியத்தில் இருக்கும் நூற்று ஐம்பது திருப்பாடல்கள்களும் உணர்வுப்பூர்வமான இன்னொரு புதையல். 

கடந்த வாரம் பாரிசு நகரில் நடைபெற்ற 21 ஆவது பருவநிலை மாறுதல் தொடர்பான மாநாட்டில் பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். இத்தகைய மாநாடுகளினால் விளைந்த மாற்றங்களைப் பற்றியச் செய்திகளை நாம் வாசிக்க முடிவதே இல்லை. இயற்கை நேசமும், மானுட அன்பும் கலந்த அறிவியலே நமது இன்றைய தேவை. நடப்பதுதான் என்ன? ஆயுதங்களையும் அவர்களே உருவாக்குகிறார்கள். பின்னர் அவற்றை வியபாரம் செய்கிறார்கள். பின்னர் அந்த ஆயுதங்களிலிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்ற போர் செய்கிறார்கள். இந்தச் சண்டையில் சாதாரண தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில 'அதிகாரப்பூர்வமான தீவிரவாதிகளுக்கு' நோபல் பரிசு தரப்படுகிறது. இதுதான் இன்றைய காலகட்டம் சந்திக்கும் மிகவும் அபாயகரமான தீவிரவாத சுழற்சி.

நான் ஒளிந்து கொண்டேன்

விவிலியத்தில் கடவுள் மனிதனைப் பார்த்து கேட்கும் முதல் கேள்வி, 'நீ எங்கே இருக்கின்றாய்?' அதற்கு மனிதன், 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே நான் ஒளிந்து கொண்டேன்' என்றான் (தொ.நூ 3:9-10). கீழ்படியாமை என்னும் பொறி வைத்து மனிதனைப் பிடித்துக்கொண்டது சாத்தான். மனிதன் தனது பாவத்திற்கு பெண்ணே காரணம் என்று தனது ஆட்காட்டி விரலை அடுத்தவரை நோக்கி சுட்ட ஆரம்பித்தது அப்போதுதான். இப்போதும் விலக்கப்பட்ட கனிகளின் மீதான ஈர்ப்பு நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. அது தேவைக்கு அதிகமான செல்வமாக இருக்கலாம். அறத்தை மீறிய இன்பமாக இருக்கலாம். பொறுப்புகளைத் துறந்த சுதந்திரமாக இருக்கலாம். இக்கனிகளைத் தின்பதும், அதற்குக் காரணமாக அடுத்தவரைக் கைகாட்டுவதுமே பாவம் என்று தொடக்க நூல் நமக்குச் சொல்லித் தருகிறது. நமது திருமுழுக்கின் போதும், உறுதிபூசுதலின் போதும் நமக்கு அருளப்பட்ட தூய ஆவியின் கனிகளை விட, விலக்கப்பட்டக் கனிகள் கவர்ச்சியாக இருக்கின்றன. ஆதாமைப் போல் கீழ்படியாமையால் ஒளிந்து கொள்ளாமல், கடவுளின் முன் வந்து நிற்போம். அவர் நம்மைக் கண்டுபிடிக்கட்டும். 

நான் ஆண்டவரின் அடிமை

புதிய ஏற்பாட்டில் வானதூதர் அன்னை மரியாளை வாழ்த்துகிறார். 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். அன்னை மரியாள் சொல்கிறார்: 'நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்' (லூக்கா 1:26-38). இங்கே புதிய ஏவாள் ஆண்டவருக்கு கீழ்படிகிறாள். விளைவுகளைப் பாராமல் கடவுளின் திட்டத்திற்குக் கீழ்படிவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். பிறரது பார்வைக்கு முட்டாள்தனமான முடிவாக இருக்கலாம். பின்னொரு காலத்தில் நமக்கும் கூட அவ்வாறே தோன்றலாம். பெத்லகேம் விடுதிகளில் இடம் கிடைக்காமல் போனது போல எல்லோராலும் புறக்கணிப்பட்டு மாட்டுத் தொழுவத்திற்கு துரத்தப்படலாம். ஆனால் விலைமதிப்பற்ற மாணிக்கம் இயேசு இத்தகைய இடங்களில் தான் பிறக்கிறார். எனவே அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நமக்கு அன்னை மரியாளிடம் இருந்த நம்பிக்கை இருக்க வேண்டும். அன்னை 'ஆம்' என்று சொன்ன கணத்திலிருந்து, அவரை இறைவன் சிலுவையில் தொங்கியவாறே 'இதோ உம் தாய்' (யோவான் 19: 27) என்று நமக்கெல்லாம் தாயாகப் பரிசளித்தது வரையிலும் விடாது துரத்தின துன்பத்தின் கரங்கள். ஒரு எளிய பெண்மணிக்கு இருந்த மனபலத்தைப் பாருங்கள். விண்ணகம் எடுத்துச் செல்லப்படும் வரை அவள் கொண்ட நம்பிக்கையை மட்டும் அவள் ஒருபோதும் விட்டுவிடவில்லை. 'நீ இறைமகன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வா' (மத்தேயு 27:40) என்று படைவீரனின் வழியாக அலகை சோதித்த போது, அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு, தான் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து துளியும் விலகாத இயேசுவின் மனஉறுதிக்கு இணையானதுதான் அன்னை மரியாளின் நம்பிக்கையும். அதனால்தான் இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னையின் பங்களிப்பை திருச்சபை ஆர்ப்பரிப்புடன் கொண்டாடி அக்களிப்புடன் அகமகிழ்கின்றது. அன்னை மரியாள் நம்மில் ஒருவர். முழுவதும் மனிதர். ஒருவர் எந்த அளவிற்கு இறைவனின் திட்டத்திற்கு தன்னையே கையளிக்க முடியும் என்பதற்கு அன்னையே ஒரு முன்மாதிரி. அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத புனிதர்கள் அனைவரும் நமது முன்னோடிகளே! அவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்றால் அவர்களை கடவுளுக்கு இணையாக்கி விட்டோம் என்று சிலர் கதறுவது மிகவும் பாமரத்தனம். கடவுள் தனக்கு கீழ்படிந்த பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதியை நாம் கொண்டாடுகிறோம். தேர்வில் முதல்  மதிப்பெண் எடுத்த நம் நண்பனின் மகிழ்ச்சியில் நாம் பங்கெடுக்கிறோம் அல்லவா? நாம் தோல்வியுறும் சமயத்தில் அவனது உதவியைப் பெற்றுக்கொள்கிறோம் அல்லவா? இதைப்போன்றது தான் கத்தோலிக்கத் திருச்சபை அன்னை மரியாளிடமும், அவரது கணவர் சூசையிடமும், எண்ணிலடங்கா புனிதர்களிடமும் கொண்டிருக்கும் நம்பிக்கையும். நண்பனின் வெற்றியில் பங்குகொள்ளதவர்களின் மனநிலை எத்தகைய வன்மங்களைக் கொண்டது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நமது சூழலில்

கத்தோலிக்கத் திருச்சபையின் யூபிலி ஆண்டானது உலகின் அனைத்துத் தலத்திருச்சபைகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆம்! யூபிலி ஒரு கொண்டாட்டத்தின் ஆண்டு. நாம் பாவத்தின் பிள்ளைகள் அல்ல. அருளின் பிள்ளைகள் என்பதை நினைவுபடுத்தும் ஆண்டு. நாம் நம்மையும், பிறரையும் அன்போடு ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் ஆண்டு. நம்மை அச்சுறுத்திய சென்னை-கடலூர் வெள்ளத்தில், இந்த இரக்கத்தின் யூபிலியை நாம் கண்கள் பனிக்க கண்டுகொண்டிருக்கிறோம். மனிதர்கள் முழு மனிதர்களாக செயல்படும் போது கடவுள் மகிமைப்படுத்தப்படுகிறார். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன். 

1. சென்னையில் பெய்த கனமழை பாதிப்புக்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தனர். இதனை அவர்கள் தங்களது வருமானத்திலிருந்து சேமித்து வழங்குவதற்காக கடந்த 3 நாள்களாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு அதில் மிச்சப்படுத்திய தொகையை மாவட்ட ஆட்சியர் அனில் கவாடேவிடம் காசோலையாக வழங்கினர். இதை 'தமிழ் இந்து' நாளிதழில் (டிசம்பர் 8, 2015. யூபிலி ஆண்டின் முதல் நாள்) வாசித்த போது உண்மையாகவே அழுதுவிட்டேன். 'வரி தண்டுவோரும், விலை மகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (மத்தேயு 21:31) என்ற இயேசுவின் வாக்கு நம் கண்முன் நிறைவேறிற்று. கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர்களின் வணக்கம் பற்றியே பதபதைத்துக் கொண்டிருப்பவர்களுக்குச் மட்டும் சொல்கிறேன். இத்தகைய தாய்மார்கள் இறையாட்சிக்கு உட்படுவதை நாங்கள் விழா எடுத்து கொண்டாட விரும்புகிறோம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

2. 'தமிழ் இந்து' இணைய நாளிதழில் வரும் செய்திகளை விட, அவற்றிற்கான வாசகர்களின் கருத்தை ஆவலுடன் படிப்பது என் வழக்கம். எப்போதும் இரண்டு வகையான கருத்துக்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும். இன்றைய (டிசம்பர் 8, 2015) நாளிதழில் எந்த ஒரு செய்திக்கும் நேரெதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் இரு நபர்கள் மழை வெள்ளம் பற்றிய ஒரு செய்திக்கு இட்டிருந்த இணக்கமானப் பதில்கள்தான் அவற்றை இக்கட்டுரையில் பதியத் தூண்டுகின்றன.
நபர் 1:       'செ' என்ற புனைபெயரில் எழுதுபவர்.
'சென்னையில் இசுலாமிய சகோதரர்களின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மனிதாபிமானத்தின் அடையாளம் என்று சென்னையிலிருக்கும் என் உறவினர்கள் தெரிவித்தனர். பேரிறைவன் யாராயினும் அந்த இசுலாமிய சகோதரர்களுக்கு பெருங்கொடை அருள்வானாகுக.'
நபர் 2:       இவரது பெயர் ரெங்கநாத ஐயர்.
'இவர்கள் நமது சகோதரர்கள் அல்லவா? அப்புறம் ஏன் அவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்?'
இது அவ்வளவு முக்கியமில்லாத ஒரு செருகலாகத் தோன்றலாம். ஆனால் இதுவும் என்னைத் தொட்டது. முதலாம் நபர் திராவிட சிந்தனை கொண்டவர். பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எப்போதும் கருத்து பதிவிடுபவர். இரண்டாமவர் ஒரு ஐயர். இருவரும் பேசுவது தங்களுக்கு சம்பந்தமில்லாத இசுலாமிய சகோதரர்களின் மனிதாபிமானப் பணிகளைப் பற்றி. சாதி, மதம், கொள்கைகள் எதுவும் மனிதாபிமானத்தின் முன் ஒன்றுமில்லாததாகிப் போகும் அதிசயத்தைக் காணமுடிந்தது. இதுவும் யூபிலியின் அடையாளம் தான்.

3. 'எனது இரத்த வகை 'ஓ பாசிட்டிவ்'. தேவைப்படுவோர் அணுகவும்' என்று ஒருவர் தனது அலைப்பேசி எண்ணைக் கொடுத்து முகநூலில் பதிவிட்டதாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது ஒரு கட்டுரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டடிருந்தார். பெறுவதை விட கொடுப்பதில்தான் இன்பம் என்பதையும் இந்த மழை நமக்குச் சுட்டிக்காட்டிவிட்டது. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தனது இரத்தத்தையும் கூட கொடுக்க மனிதர்கள் தயாராக இருக்கின்றனர். நாம் இன்னும் இறைவன் படைத்த நல்ல உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நண்பர்களே!

4. திரு. வை.கோ அவர்கள் சென்னையின் ஒரு பகுதியில் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பெண்மணியின் தட்டில் ஒரு அகப்பை உணவினை இடுகிறார். அடுத்த அகப்பையை எடுக்கும் முன் பெண்மணி திரும்பி விடுகிறார். வை.கோ அந்த பெண்ணைக் கூப்பிட்டு இரண்டாவது அகப்பை உணவையும் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். அந்தப் பெண்மணி கூறினாறாம், 'பின்னால் வருபவர்களுக்கு தேவைப்படலாம் ஐயா. மீதியிருந்தால் பிறகு வாங்கிக்கொள்கிறேன்' என்று. பேராசை என்னும் பேய் பிடித்த உலகத்திற்கு இந்தத் தாயார் நிறைய பாடம் சொல்லித் தருகிறார். 

5. எனது பள்ளிகால நண்பன் நேற்று என்னைத் தொடர்பு கொண்டான். தனக்கு ஒரு டெம்போ இருப்பதாகவும், நண்பர்கள் துணையோடு கடலூர் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு டெம்போ பொருள்களைச் சேகரிக்க முடிந்தால், தனது வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரினான். எத்தனை லோடு கிடைத்தாலும், அத்தனை முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறினான். இதிலும் என்ன சிறப்பு என்றால் அவனது சொந்த ஊர் கன்னியாகுமரி. இப்போது வேலை செய்வது சவுதி அரேபியாவில். அவனது மனது எங்கிருந்தோ பதபதைக்கிறது கடலூரிலிருக்கும் தனது சகோதரர்களுக்காகவும், சகோதரிகளுக்காகவும். ஊரிலிருக்கும் இன்னொரு நண்பனின் உதவியோடு இதைச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறோம். 

இப்படி எத்தனை எத்தனையோ நெகிழ்ச்சியானப் பதிவுகளால் இந்த நாள்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. இந்த யூபிலி ஆண்டின் தொடக்கத்தில் நாம் இறைவனால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன். நமது நம்பிக்கையைப் பலப்படுத்த இந்த ஆண்டு நமக்கு உதவட்டும். இயேசு என்ற தலைவரின் வழி தொடர இந்த ஆண்டு நமது கால்களுக்கு நிறைய ஆற்றலைத் தரவேண்டும் என்று விரும்புகின்றேன். எல்லைகள் இல்லாத மானுட சேவையில் நம்மையே இணைத்துக்கொள்வோம். பிறரன்புச் சேவையில் கிடைக்கும் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் வாழும் போதே நமக்குக் கிடைக்கும் மீட்பு. யூபிலி ஆண்டு அன்பின் ஆண்டு. சேவையின் ஆண்டு. மன்னிப்பின் ஆண்டு. நம்மைப் புதுப்பிக்க கிடைத்திருக்கும் இறைவனின் இரக்கத்தின் ஆண்டு! மகிழ்ந்து கொண்டாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக